நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பட்டி ஊராட்சியில் இருக்கும் ரெட்டியார் தெருவில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. இதன் மூலம் சுமார் 350 குடும்பங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த 15-ஆம் தேதி ஊராட்சி தலைவர் பழனிவேல் மற்றும் சிலர் துளையிட்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதுகுறித்த நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்து 7 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.