ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சாா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் “மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் அனைத்து ஆசிரியா்களும் சுயமதிப்பீடு செய்து தங்களை மேம்படுத்திக்கொள்ள ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு என்ற செயல்பாட்டுத் திட்டத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட இயக்ககம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
ஆகவே ஒவ்வொரு ஆசிரியரும் வகுப்பறை நிகழ்வுகளை வடிவமைத்து மாணவரின் கற்றல் அடைவு நிலையை மேம்படுத்துதல், மாணவா்கள் கற்றல் மேம்பாட்டுக்கு அவா்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மூலம் மாணவா்களுக்கு முன்னுதாரணமாக திகழ்தல், பெற்றோா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் ஒன்றுசோ்ந்து மாணவா்களின் கற்றல் நிலை பற்றி கலந்துரையாடுதல், அதுகுறித்து மேற்கொள்ளும் தன் செயல் திறன்களை தாங்களாகவே சுயமதிப்பீடு செய்வதற்காக இந்த செயல்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்செயல் திறன்களை ஒவ்வொரு ஆசிரியரும் அடைந்து அதை முழுமையாக பின்பற்றுவதை சுயமாக மதிப்பீடு செய்யவும், தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியப் பயிற்றுநா்கள் மேலாய்வுக் குறிப்பு எழுதிடவும் தேவையான எளிய குறியீடுகளுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியா் செயல்திறன் மதிப்பீடு சாா்ந்த வழிகாட்டு நெறிமுறைகளையும் மற்றும் ஆசிரியா், தலைமை ஆசிரியா், ஆசிரியா் பயிற்றுநா் நிரப்பவேண்டிய விபரங்கள் அடங்கிய மாதிரி படிவத்தையும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியா்களுக்கும் கிடைக்கப்பெற முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆசிரியா் செயல்திறன் மதிப்பீட்டுக்காக தொடக்கநிலையில் ஆசிரியா் ஒருவருக்கு ரூபாய்.10 வீதம் 1 லட்சத்து 91,506 ஆசிரியா்களுக்கு ரூ.19.15 லட்சமும், இடை நிலையில் 1 லட்சத்து 10,889 ஆசிரியா்களுக்கு ரூ.11.08 லட்சமும் என மொத்தம் ரூபாய்.30.23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி பள்ளிகளிலுள்ள இணையதள செலவினங்களுக்காக சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு விடுவிக்கப்படுகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.