மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி பெற உபகரணங்களை தர மறுப்பதாக கூறி வீரர், வீராங்கனைகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விடுதி மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றார்கள். இதில் மைதானத்தில் பயிற்சி அளிப்பதும், கிளப்போல் அமைத்தும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சி பெறும் வீரர், வீராங்கனைகள் விளையாட்டு மைதானத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்துவார்கள்.
இந்நிலையில் தற்சமயம் உபகரணங்கள் எதுவும் தர மறுக்கிறார்கள் என்று விளையாட்டு வீரர்கள் குற்றம் சொன்னார்கள். இதனையடுத்து நேற்று காலை தடகள பயிற்சி தொடர் ஓட்டத்திற்கு ஸ்டிக் ஒன்றை வீரர்-வீராங்கனைகள் உபகரணங்களை கேட்டார்கள். ஆனால் அதற்கு அங்கு இருந்தவர்கள் உபகரணங்களை தர மறுத்துவிட்டார்கள். இந்த நிலை தொடர்ந்து இருந்ததால் வீரர்-வீராங்கனைகள் கோபமடைந்து மைதானத்தின் வெளியில் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பிரிவு போலீசார், டவுண் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் கலெக்டரிடம் தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கொடுத்தனர். இதனையடுத்து வீரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் கூறியதாவது, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் கொடுக்கப்பட்ட உபகரணங்கள் அனைவரும் பயன்படுத்த அனுமதி உண்டு. ஆனால் இரண்டு கிளப்பை சேர்ந்தவர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்கள். எனவே இது தொடர்பாக கலெக்டரிடம் புகார் கொடுப்பதாக தெரிவித்தனர்.