கொரோனா பரவல் அச்சத்தை அடுத்து கர்நாடகாவில் திரையரங்குகளில் கட்டாயம் முக கவசம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு.
கோவிட்-19 4ஆவது அலை அச்சத்திற்கு மத்தியில், கர்நாடகா அரசு திரையரங்குகள், பப்கள், உணவகங்கள் மற்றும் பார்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே.சுதாகர், புத்தாண்டு விருந்துகளுக்கு முகமூடிகள் கட்டாயம், புத்தாண்டு கொண்டாட்டங்களை அதிகாலை 1 மணிக்குள் முடித்துக் கொள்ள வேண்டும். மூடிய இடங்கள், குளிரூட்டப்பட்ட அறைகள் மற்றும் வெளிப்புற கொண்டாட்டங்களில் நெரிசலான இடங்களில் முகமூடிகள் கட்டாயமாகும். கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மக்கள் இருக்கக்கூடாது என்றார்.
மேலும் தடுப்பூசி போடுவதில், மக்கள் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டும் என்று கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது என்று கூறினார். மூத்த குடிமக்கள், உடல் நலக்குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நெரிசலான இடங்களை தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் துணைத் தலைவரான வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுதாகர், பெங்களூரு மற்றும் மங்களூரு சர்வதேச விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சோதனை தொடரும் என்றார்.
சர்வதேச பயணிகளுக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் போது பாசிட்டிவ் என வந்தால் பெங்களூரில் உள்ள பௌரிங் மருத்துவமனை மற்றும் மங்களூருவில் உள்ள வென்லாக் மருத்துவமனை ஆகியவைகளில் இரண்டு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நியமிக்கப்பட்டுள்ளன. சீனாவில் இருந்து மாநிலம் திரும்பிய பயணி ஒருவரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.