கோழி கடை வியாபாரி ஒருவர் முக கவசம் அணியாமல் வியாபாரம் செய்ததால் காவல்துறை அதிகாரி ‘ஷூ’ காலினால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்து இருக்கும் பெரும்பாக்கம் பகுதியில் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி பொருட்களை வாங்குகிறார்களா என கண்காணிக்க காவல்துறையினர் ஒருவர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கே இருந்த கோழி கடைக்கு சென்ற போது ஊழியர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அதனை பார்த்த காவல்துறையினர் முககவசம் ஏன் அணிய வில்லை என அவரிடம் கேட்டுள்ளார்.
இதனால் காவல்துறையினர் மற்றும் கடை ஊழியருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுயுள்ளது. அதனால் ஆத்திரம் அடைந்த காவல்துறையினர் தனது காலினால் அவரை மிதித்து தாக்கி அங்கிருந்த சென்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அங்கே இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அதனால் அந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் காவல்துறையினர் கடை ஊழியரை தாக்கிய காட்சி கண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி அறிந்த சென்னை தெற்கு காவல்துறை இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் மற்றும் பரங்கிமலை காவல்துறை துணை கமிஷனர் அருண் பாலகோபாலன் ஆகியோர் விசாரணை நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து கடை ஊழியரை ‘ஷூ’ காலால் மிதித்து தாக்கியதால் காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ இடைநீக்கம் செய்ய இணை கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தரவிட்டுள்ளார்.