மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை கூட்டம் நடத்துகிற நிலையில் தனிக்கட்சி ஆரம்பிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது கடும் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திமுகவின் முன்னாள் அமைச்சர் முக. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்திற்கு உசிலம்பட்டியில் இருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது திமுகவினர் இடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை அழகிரி கட்சி ஆரம்பிக்கும் பட்சத்தில், திமுகவை அது எந்த அளவுக்கு பாதிக்கும் என்று தெரியவில்லை. தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து தனியாக கட்சி தொடங்குவது பற்றியும் முடிவு செய்யப்படும் என்று அழகிரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.