தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கட்டணம் இல்லாமல், பொதுமக்களுக்கு இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200-க்கும் மேற்பட்ட சேனல்களைப் பொதுமக்களுக்கு ரூ.140+ஜிஎஸ்டி என்ற குறைவான மாத சந்தா தொகையில் வழங்கி வருகிறது. இது மற்ற தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் மிகக் குறைவான கட்டணம் ஆகும். இதில் ஒருசில கேபிள் ஆப்பிரேட்டர்கள் தங்கள் சுய லாபத்திற்காக, அரசு செட்ஆப் பாக்ஸை வழங்காமல் தனியார் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதலாக வசூல் செய்வதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்ற குறிஞ்சி சிவக்குமார் அளித்த பேட்டியில், வெளிப்படைத்தன்மையுடன் மிகக் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். இதனால் கட்டண குறைப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.