ஒரு நபரிடம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கார் ஒன்று உள்ளது. திடீரென்று அந்த காரை வங்கிக்கு எடுத்துச் சென்று அடமானம் வைத்து தனக்கு 10 ஆயிரம் ரூபாய் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதனைக் கேட்ட வங்கி ஊழியர்கள், இவ்வளவு விலை உயர்ந்த காரை வைத்துக்கொண்டு இருக்கும் இவரிடம் 10 ஆயிரம் ரூபாய் பணம் இருக்காதா என்று திகைப்புடன் பார்த்துள்ளனர். பிறகு அவர் கேட்கும் பணத்தை கொடுத்தனர்.
அதுமட்டுமல்லாமல் ஒரு வருடம் கழித்து நீங்கள் வாங்கிய 10,000 பணத்துடன் ஆயிரம் ரூபாய் வட்டியும் சேர்த்து கொடுத்து விட்டு உங்களது காரை நீங்கள் எங்களது வங்கியின் பார்கிங்கில் இருந்து எடுத்து செல்லலாம் என்று கூறியுள்ளனர். அவரும் தனது காரை அங்கேயே விட்டுவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். பிறகு ஒரு வருடம் கழித்து தான் வாங்கிய பணத்தை வட்டியுடன் வங்கியில் கொடுத்து விட்டு காரை மீட்டார்.
ஆனால் அவர் கிளம்புவதற்கு முன்பு அங்கிருந்த வங்கி ஊழியர், பார்ப்பதற்கு நீங்கள் இவ்வளவு பணக்காரராக தெரிகிறீர்கள், ஆனால் எதற்காக வெறும் 10000 ரூபாய்க்கு உங்கள் காரை அடமானம் வைத்தீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், நான் ஒரு வருடத்திற்கு என் குடும்பத்துடன் family tour செல்ல வேண்டி இருந்தது. அதனால் இவ்வளவு விலை உயர்ந்த காரை வீட்டில் வைத்தால் யாராவது திருடி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால் உங்களது வங்கியில் வைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதி இங்கு விட்டு சென்றேன் என்று கூறினார். இதனைக் கேட்ட அந்த வங்கி ஊழியர் திகைப்படைந்தார்.