நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி, தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணியும், மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் வென்றிருந்தன. இதனிடையே நான்காவது போட்டியில் வெலிங்டனில் இன்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி நியூசிலாந்தை பேட்டிங் ஆட பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி கேப்டன் சோபி டிவைனின் அபாரமான சதத்தால் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களைக் குவித்தது. சோபி 65 பந்துகளில் 105 ரன்கள் (12 பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள்) விளாசினார்.
இப்போட்டியில் சதம் விளாசியதன்மூலம் சோபி டிவைன், சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதம் அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்த நபர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பாக இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ், நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கல்லம், வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெயில் ஆகியோர் தொடர்ச்சியாக நான்கு அரைசதம் விளாசியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை சோபி தகர்த்துள்ளார்.
இது மட்டுமல்லாது சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த இரண்டாவது நியூசிலாந்து வீராங்கனை என்ற பெருமையையும் அவர் அடைந்தார்.
இப்போட்டியில் சேஸ் செய்த தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 102 ரன்களுக்குள் சுருண்டதால், நியூசிலாந்து அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரையும் 3-1 எனக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி வியாழக்கிழமை டுனேடின்னில் நடைபெறுகிறது.