புதுச்சேரியில் வாட்ச்மென் ஒருவரது வீட்டிற்கு ஒரு மாத மின் கட்டணம் ரூ. 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் என பில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை திருவள்ளுவர் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் (57). டி.வி மெக்கானிக்கான இவர் இரவில் லாஸ்பேட்டையில் உள்ள ஒரு அப்பார்ட்மென்டில் செக்யூரிட்டியாக பணி செய்கிறார். சரவணன் வீட்டிற்கு வழக்கமாக மின் கட்டணம் மாதம் ரூ. 800 க்குள் வருவது வழக்கம். கடந்த மாதம் மின்சார உபயோகத்திற்கான ரீடிங் 20 ஆயிரத்து 630. இதற்கு ரூ. 680 மின் கட்டணமாக வந்துள்ளது.
ஆனால் இந்த மாதம் அவருக்கு மின் கட்டணம் ரூபாய் 12 லட்சத்து 26 ஆயிரத்து 944 ரூபாய் என வந்ததைப் பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சரவணன் முத்தியால்பேட்டையில் உள்ள மின் அலுவலகத்திற்கு சென்று விபரம் கேட்டார். அங்கிருந்த அதிகாரிகள், சரவணன் வீட்டிற்கு இந்த மாதம் மின்சார ரீடிங் 21 ஆயிரத்து 115 ஆகும். ரீடிங் எடுத்த மின் துறை ஊழியர், தவறுதலாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 150 என குறிப்பிட்டுள்ளார். அதனால் மின் கட்டண தொகை அதிகமாக வந்துள்ளது. அதை சரி செய்து கொடுத்து விடுகிறோம் என தெரிவித்தனர். இந்த மின் கட்டண பில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.