தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோரிக்கையை ஏற்று மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி வெளியானது. இதையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்பு மின்கட்டண உயர்வை முடிவு செய்வதற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தீர்மானித்தது.
சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பொதுமக்களிடம் மின் கட்டண உயர்வு பரிந்துரை தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கருத்து கேட்பு கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் மின் கட்டண உயர்வால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எடுத்துக் கூறி மின்கட்டணத்தை உயர்த்த எடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எத்தகைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் மின் கட்டணத்தை உயர்த்தாமல் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.