மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகில் நல்லாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சீனிவாசன்(52). இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ள நிலையில் அதில் நெல் சாகுபடி செய்து வந்துள்ளார். நல்லாம்பட்டியை சுற்றி வனப்பகுதி இருப்பதால் அங்கு காட்டு யானைகள், பன்றிகள் இரவு நேரங்களில் வயல்களில் நுழைந்து பயிர்களை தின்று காலால் மிதித்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. இதன் காரணமாக வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுப்பதற்கு சீனிவாசன் தனது விவசாய நிலத்தை சுற்றி மின் விளக்கை எரிய விட்டுள்ளார்.
இதையடுத்து வனப்பகுதியிலிருந்து வெளிவந்த 40 வயது யானை ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்வயலில் போடப்பட்டிருந்த மின் வயரில் சிக்கியுள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் நேற்று காலை சீனிவாசன் தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது யானை உயிரழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின்பேரில் பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
அப்போது பஞ்சப்பள்ளி மலைப்பகுதியை சுற்றி திரிந்த 8 யானைகளில் ஒரு யானை பிரிந்து சென்று உணவு தண்ணீர் தேடி வந்த நிலையில் நெல்வயலில் போடப்பட்டிருந்த மின் வயரில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் அந்த இடத்திலேயே யானையை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பின் வனப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டு யானையை வனத்துறையினர் புதைத்துள்ளனர். மின்சாரம் தாக்கி இறந்தது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.