மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவத்தில் அலட்சியமாக இருந்த மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமங்கலம் அருகே உள்ள அம்மாபட்டியை சேர்ந்த விவசாயி அக்னி வீரன் என்பவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள வயல் வெளியை சுத்தம் செய்தார். அப்போது கீழே கிடந்த இரும்பு குழாய் ஒன்றை ஊன்றி நிறுத்தினார். அப்போது அந்த குழாயின் மீது தாழ்வாக இருந்த மின் கம்மி உராய்ந்தது. இதில் மின்சாரம் தாக்கி அக்னி வீரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சிந்துபட்டி போலீசில் அக்னி வீரனின் உறவினர்கள் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் புகார் எடுத்துக்கொள்ள காலதாமதம் ஆனது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மதுரை விருதுநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்லாததால் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.