தமிழகம் முழுவதும் நேற்று முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்சார ரயில்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அதில், தற்போது வரையிலும் மின்சார ரயிலில் பயணம் செய்ய பழைய வரைமுறைகள் தான் பின்பற்றப்படுகிறது.
அதே வரைமுறையில் பெண் பயணிகள் பயணம் செய்துகொள்ளலாம். மாணவிகள் எப்போது வேண்டுமானாலும் ரயிலில் பயணிக்கலாம். ஆனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் “பீக் அவர்” நேரங்களில்தான் மின்சார ரயில்களில் கல்லூரி அடையாள அட்டையை காண்பித்து டிக்கெட் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம். மேலும் சீசன் டிக்கெட் தேவைப்படும் சமயத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் இருந்து முறையான அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு அதை கவுண்டர்களில் காண்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.