சோதனை ஓட்டத்தின் போது மின்சார ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கோவில்காடு பூசாரி சுருட்டையன் இவரது மனைவி செல்லம்மாள். திருச்சியிலிருந்து காரைக்குடிக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. பின்பு மாலை 3.30 மணி அளவில் திருச்சியில் இருந்து புறப்பட்ட மின்சார ரயில் காரைக்குடி நோக்கி 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த போது இளையாவயல் என்ற இடத்தில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்லம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்லம்மாவிற்கு காது கேட்காது, சற்று மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் செல்லம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.