சீரான மின்விநியோகம் செய்யுமாறு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் லோயர்கேம்ப் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகின்றது. இதனால் மின் மோட்டார் மூலம் தண்ணீர் தொட்டிகளில் மற்றும் வீடுகளில் ஏற்ற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே ஆத்திரமடைந்த 20வது வார்டு பகுதியை சேர்ந்த பெண்கள் கூடலூர்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் திரண்டு காலிக்குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடலூர் வடக்கு காவல் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனையடுத்து மின்வாரிய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சீரான மின் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்த பின்னரே பெண்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.