மின்தடை தொடர்பாக அவதூறான செய்திகள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது மின்சாரம் என்பது மிகவும் அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. கொஞ்ச நேரம் கூட நம்மால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டோம். இந்த நிலையில் மின்சாரம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால் துணை மின் நிலையங்களில் வேலை செய்யும் மின் ஊழியர்கள் சார்பாக பராமரிப்பு பணிகள் நடைபெறும். தொழிற்சாலை முதல் வீடுகள் வரை மின் தேவை என்பது இருந்து வருகிறது. அதற்கு ஏற்ப கட்டணங்களும் அதன் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. தமிழகத்தில் தற்போது அதிக மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
அதன் காரணமாக சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழக அரசு குறித்து அவதூறாக செய்திகளை பரப்பி வருகின்றனர். அதனை கண்டிக்கும் விதமாக தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ஏற்படும் மின் தடை குறித்து சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படிப்பட்ட தகவல்களை பரப்ப வேண்டாம். அதையும் மீறி பரப்புபவர்கள் மீது சட்டப்படி அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 28ம் தேதி மட்டும் அதிகபட்சமாக மின் நுகர்வாக 17 ஆயிரத்து 380 மெகாவாட் பயன்படுத்தப்பட்டு இருந்ததாகவும், இதனால் இந்த மின் தடையானது தமிழகம் மட்டுமல்லாமல் ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ள காரணத்தினால் தான் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.