Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மின்தடை காரணமாக… மின்வாரிய ஊழியர்கள் மீது தாக்குதல்… 6 பேர் காயம்…!!!

மின்தடை ஏற்பட்டதால் கோபத்தில் சிலர் மின்வாரிய ஊழியர்களை தாக்கியதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்தது. இதனால் சில இடங்களில் மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்ததால் பல இடங்களில் மின் கம்பிகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் குடியாத்தம் முழுவதும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.

இதையடுத்து இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களின் மீது விழுந்த மரக் கிளைகளை அகற்றி படிப்படியாக மின் விநியோகம் செய்தார்கள். ஆனாலும் லட்சுமணாபுரம், கள்ளூர் பகுதியில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது. இதனை அடுத்து கள்ளூர் கிராமத்தில் வசித்த வழக்கறிஞர் மதன்குமார் உட்பட பலர் மின்தடை அடிக்கடி ஏற்படுகிறது ஏன் என்று மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த தாக்குதலில் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன்(57), போர்மேன் ஆர். ரவிச்சந்திரன்(60), வயர்மேன் ஏ.பிரகாசம்(46), டி.என் பெருமாள்(55), மின்பாதை ஆய்வாளர் சேகர்(50), ஊழியர் ராஜ்குமார்(25) ஆகிய 6 பேரும் காயமடைந்து குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை அறிந்த மின்வாரிய ஊழியர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதுகுறித்து குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உட்பட காவல்துறையினர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மின்வாரிய ஊழியர்களிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்கறிஞர் மதன்குமார் உட்பட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் வழக்கறிஞர் மதன்குமார்(36), வினோத்குமார்(32) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பலரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதனை அடுத்து மின்வாரிய இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊழியர்களை தாக்கிய சம்பவத்தை கண்டித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மின்வாரிய ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக குடியாத்தம் செருவங்கி பகுதியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தபட்டது.

இந்த போராட்டத்தில் மின்வாரிய ஊழியர் சி.ஐ.டி.யு தொழிற்சங்க மாநில செயலாளர் ஜோதி, திட்ட செயலாளர் சிவசீலன், கோட்ட செயலாளர் தினகரன் உட்பட 150க்கும் அதிகமானோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இத்தகவலை அறிந்த மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாஜலபதி, துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி உட்பட காவல்துறையினர் அங்கு சென்று இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து விரைவில் குற்றவாளிகளை பிடிப்போம் என்று உறுதி கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.

Categories

Tech |