தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஊரடங்கு காலத்தில் மின்தடை ஏற்படுவதாகப் புகார்கள் வந்த நிலையில், ஊரடங்கு காலத்தில் மேற்கொள்ளப்பட்டவரும் மின் பராமரிப்பு பணிகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்து பணியாற்றுவோர் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தொடர்ச்சியாக மின் விநியோகம் இருக்கும்.
அதேபோல் ஆன்லைன் தேர்வுகள் நடைபெறுவதாலும் ஊரடங்கு முடியும்வரை மின்தடை இருக்காது. கடந்த ஆறு மாதங்களாகப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையிலும், ஊரடங்கு முடியும் வரை பராமரிப்பு பணிகளுக்கான மின்தடை ஏற்படாதவாறு அப்பணிகள் ஒத்திவைக்கப்படும். அதேவேளையில் தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டுமே போர்க்கால அடிப்படையில் செய்யப்படும்’ எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், மின் தடை குறித்து தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். எந்தெந்த இடங்களில் எப்போது மின்தடை ஏற்பட்டது என தெரிவித்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை இருக்கக்கூடாது என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி மின்வாரியம் செயல்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அறிவிக்கப்படாத மின் தடை பற்றிய புகார்களுக்கு 1912 என்ற எண்ணுக்கு அழைத்து எப்போது வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். அதுமட்டுமின்றி 9445850811 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 044-28521109, 044-28524422 என்ற தரைவழி எண்களிலும் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம்.