கனமழையால் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழந்தது.
சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் நேற்று பிற்பகல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழை சுமார் 35 நிமிடங்கள் வரை பெய்தது.மணக்காடு, ராஜ கணபதி நகர், பச்சப்பட்டி, களரம்பட்டி, அழகாபுரம் பெரிய புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும் அழகாபுரம் புதூர் பகுதியில் சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து மழை நீர் கலந்து தெருவில் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் வசித்து வந்த ஜெயக்குமார் என்பவர் வீட்டில் மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாடுகளை வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது கனத்த மழை பெய்ததால் மின்னல் தாக்கி ஜெயக்குமாருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று பரிதாபமாக இறந்துள்ளது. இதனால் ஜெயக்குமார் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.