மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கொங்கர்பாளையம் பகுதியில் மின்வாரிய ஊழியரான சக்திவேல்(43) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மின் வாரிய பணியாளர்கள் பி.கே.புதூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை உதவிக்காக வைத்திருந்தனர். நேற்று கொங்கர்பாளையம் அண்ணா வீதியில் இருக்கும் பாப்பாத்தி என்பவர் தனது வீட்டில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதனை சரி செய்வதற்காக சக்திவேலும், விஸ்வநாதனும் அங்கு சென்றுள்ளனர். அப்போது விஸ்வநாதன் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். சக்திவேல் கீழே நின்றுள்ளார். இதனை அடுத்து விஸ்வநாதனிடம் மின் இணைப்பை விரைவில் கொடுத்துவிட்டு நீ கீழே இறங்கு. நான் மின்மாற்றியை இயக்கி விட்டு வருகிறேன் என சக்திவேல் கூறியுள்ளார். அதற்கு சிறிது நேரத்தில் இணைப்பு கொடுத்து விடுவேன் என விஸ்வநாதன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விஸ்வநாதன் கீழே இறங்கியதாக நினைத்து அங்கிருந்து சிறிது தூரம் சென்று சக்திவேல் மின்மாற்றியை இயக்கிவிட்டார்.
ஆனால் மின் கம்பத்தில் இருந்து விஸ்வநாதன் கீழே இறங்கவில்லை. இதனால் மின்சாரம் தாக்கி மின் கம்பிகள் மீது விஸ்வநாதன் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக்திவேல் உடனடியாக மின்மாற்றியை அணைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஸ்வநாதனின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.