மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு பகுதியில் கூலித் தொழிலாளியான ஜோஸ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செந்தில்குமாரி(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபிகா(15) வர்ஷிகா(1) என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் ஜோஸின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் அவரது வீட்டிற்கு முன் நின்ற மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார். அந்த மரக்கிளைகள் ஜோஸ் வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் மீது விழுந்து மின் விநியோகம் பறிக்கப்பட்டது.
எனவே ஜோஸ் அந்த கிளைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ஜோஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.