பண மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முகிலன்விளை பகுதியில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான நாராயண பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜே.கே. நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயக்குமாரின் மனைவியான சுனிதா நாராயண பெருமாளின் மருமகனுக்கு மின்வாரியத்தில் இளநிலை பொறியாளர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்காக 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய நாராயண பெருமாள் சுனிதாவின் வங்கி கணக்கிற்கு 6 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி வைத்துள்ளார்.
ஆனால் பணத்தை பெற்று கொண்ட ஜெயக்குமார் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் நாராயண பெருமாள் தனது பயணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் ஜெயக்குமார் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நாராயணபெருமாள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.