கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள போத்தனூர் பாரத் நகரில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்.பி.ஜி நகரில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அதற்கு தற்காலிக மின் இணைப்பு கேட்டு கார்த்திகேயன் ஆன்லைன் மூலம் மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது உதவி இன்ஜினியர் சுப்பிரமணியன் என்பவர் மின் இணைப்பு வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு போர்மேன் சங்கர் கணேஷ் என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.
கடந்த 24-ஆம் தேதி கார்த்திகேயன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியனையும், சங்கர் கணேசையும் கைது செய்தனர். இந்நிலையில் துறை ரீதியாக விசாரணை நடத்தி சுப்பிரமணியன், சங்கர் கணேஷ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கோவை மாவட்டம் மின்வாரிய முதன்மை என்ஜினீயர் டேவிட் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.