மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்கால் மின்வாரிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு திருவண்ணாமலை கிளை சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்க, நிர்வாகிகள் மகாலிங்கம், பழனிவேல், கருணாகரன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கௌரவ தலைவர், மாவட்ட செயலாளர், கூட்டமைப்பு மாவட்ட தலைவர் உள்ளிட்ட பல பங்கேற்று பேசினார்கள்.
இதில் அவர்கள் கூறியதாவது, ஆரணி, போளூர் ஆகிய பல கோட்டங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகி சி.பி.எஸ் தொகை வழங்கப்படாமல் இருப்பதை உடனடியாக வழங்க வேண்டும். பலருக்கு குடும்ப ஓய்வூதியம் ஒரு வருடத்திற்கு மேல் வழங்காமல் நிலுவையில் இருக்கின்றது. இதை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மூன்று மாத காலத்திற்குள் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.