தெலுங்கானாவில் மின் கட்டணத்தை வசூலிக்க வந்த மின்வாரியத் துறை அதிகாரிகளை அந்த கிராம மக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மின்சார கட்டணத்தை கணக்கீடுவது மற்றும் கட்டணம் வசூலிப்பதால் நாடு முழுவதும் உள்ள மின் துறைகளில் குழப்பமான நிலை உருவாகி வருகிறது. இதனால் மின் கட்டணம் மிகவும் அதிகமாகப் வசூலிக்கப்படுவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனால் சில சமயங்களில் மின் வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இந்நிலையில் தெலுங்கான மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள மின்வாரியத் துறை அதிகாரிகள் இருவர் தங்கள் பணி எல்லைக்கு உள்பட்ட அலதுர்கம் என்ற கிராமத்தில் மின் கட்டணத்தை வசூலிக்க நேற்று சென்றுள்ளனர்.
அந்த கிராம மக்களிடம் மின் கட்டணத்தை உடனடியாக செலுத்துமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கிராம மக்களில் சிலருக்கு மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்களில் சிலர் மின் கட்டணம் வசூலிக்க வந்த மின்வாரிய அதிகாரிகள் இரண்டு பேரையும் அங்கு இருந்த ஒரு மின் கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களால் மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மின்வாரிய அதிகாரிகள் இரண்டு பேரையும் மீட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் அளித்த புகாரையடுத்து கிராமத்தில் 5 பேர் மீது வழக்கு பதியப்பட்டு அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.