திருப்பத்தூரில் மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் வழியாக திருப்பத்தூர் துணை மின் நிலையம் இருக்கின்றது. இங்கே திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றார்கள். இதுவரை மின் கட்டணம் செலுத்துவதற்கு இங்கு இரண்டு கவுண்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.
இதனால் பெண்களும் முதியவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பொதுமக்கள் ஏற்கனவே இருந்ததைப் போல இரண்டு கவுண்டர்கள் செயல்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். இதுகுறித்து மின்வாரிய அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியுள்ளதாவது, ரூபாய் இரண்டாயிரத்திற்கும் மேல் கட்டணம் ஆன்லைன் மூலம் கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதனால் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என எங்களுக்கு உத்தரவு வந்திருக்கின்றது. ஆனால் இரண்டாயிரத்திற்கும் மேல் மின்கட்டணம் செலுத்துபவர்களும் இங்கு தான் வருகின்றார்கள். ஆகையால் பொதுமக்கள் ஆன்லைனில் பணம் செலுத்த முன் வரவேண்டும் என கூறியுள்ளார்.