கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த விபத்தில் பெண் பலியான நிலையில், 8 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் சித்திரை வேலு(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கல்யாணி(58) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சித்திரை வேலு தனது மனைவி கல்யாணி, மகன் சபாபதி(32), மருமகள் சோபி(28), பேரன் ராம்(5), பேத்தி பூஜா(2), உறவினர்களான இசக்கி(29), அகிலா(62), தனுஷ்(7) ஆகியோருடன் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ராஜாங்கபுரம் கிராமத்தில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இவர்கள் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மழைநீர் தேங்கி இருந்த பலத்தை கடந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் கல்யாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து காயமடைந்த 3 குழந்தைகள் உள்பட 8 பேரையும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.