திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 15 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் பத்து உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை துவக்க ஆட்சியர் உத்திரவிட்டார்.
இந்த நிலையில் நிலத்தின் உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்நிலையில் வருவாய்த்துறையினர் உயர்மின் கோபுரம் அமைக்கும் இடத்தை அளவீடு செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட விவசாயிகள், அதிகாரிகள் மேற்கொண்ட பணியை தடுத்து நிறுத்தி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனையடுத்து துணை வட்டாட்சியர் அளித்த புகாரை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட பதினைந்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.