மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள நாடுகாணி பொன்னூர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் என்பவர் உப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆனந்தராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மின் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் ஆனந்தராஜை மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் ஆனந்தராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து தேவாலா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.