மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் மியான்மர் ராணுவம், அந்நாட்டின் தலைவர் ஆங் சாங் சூகி,அதிபர் வின் மைண்ட் போன்ற முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.
மேலும் அந்நாட்டு ராணுவத்தை அமெரிக்கா கடுமையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல், ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடைகளையும் விதித்துள்ளது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் அந்நாட்டு மக்களையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.இந்த சம்பவத்தில் சுமார் 1500 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் மற்றும் சித்திரவதை செய்யப்பட்டு 8,800 பேர் காணாமலும் போயுள்ளனர்.மேலும் ராணுவம் இந்த எதிர்ப்பை கட்டுப்படுத்த கிராமங்களை இடித்து வருவதால் 3,00,000 க்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றி இன்றுடன் ஓராண்டு நிறைவடையுள்ள நிலையில் அந்த ஆட்சிக்கு எதிராக இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு பல ஜனநாயக அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. ஆனாலும் அமைதியான முறையிலேயே மக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இப்போராட்டத்தை ஒடுக்கும் நோக்கில் மியான்மர் ராணுவம் 12க்கும் மேற்பட்ட முக்கிய நபர்களை கைது செய்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி தங்கள் கடைகளை அடைக்க போவதாக 50க்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.அவர்களை கடந்த வாரத்திலிருந்து மியான்மர் ராணுவம் கைது செய்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றது.