குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இது குறித்து வழக்கில் 11 பேருக்கு சிபிஐ சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. அவர்கள் 15 ஆண்டு காலம் சிறையில் கழித்த பிறகு தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களுக்கான தண்டனை குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது.
இது குறித்து பரிசீலிக்க பஞ்ச்மகால் மாவட்ட கலெக்டர் சுஜால் மாயத்ரா தலைமையில் ஒரு குழுவை குஜராத் அரசு அமைத்தது. இதனையடுத்து அந்த குழு குறிப்பிட்ட கைதிகளின் ஆயுள் தண்டனை குறைப்பதற்கு பரிந்துரைத்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் அடிப்படையில் 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து 11 பேரும் கோத்ரா கிளை சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.