அயோத்தியில் கட்டப்படுகின்ற ராமர் கோயிலில் ராமருக்கு மீசையுடனான சிலையை கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிரா இந்து அமைப்பின் தலைவர் வலியுறுத்தி இருக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பாஜி பிண்டே என்பவர் இந்து மதத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவர் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பில் இருந்து அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்த அமைப்பிலிருந்து விலகி வந்துள்ளார். அதன் பிறகு ‘ஸ்ரீசிவ பிரதிஷ்தான் இந்துஸ்தான்’ என்ற புதிய இந்துத்துவா அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகின்றார். அந்த அமைப்பின் மூலமாக அவர் வெளியிடக்கூடிய கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைகளால் கருதப்படுவதால், தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்து வருகிறார். அதற்கு ஏற்ற வகையில் அவரது முகத்தில் இருக்கின்ற அடர்ந்த முறுக்கிய மீசையும் பார்ப்பவர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.
இந்தநிலையில் நாளை அயோத்தியில் பூமி பூஜைக்கு பின்னர் கட்டப்படுகின்ற கோவிலின் ராமர் சிலைக்கு மீசை வைக்க வேண்டுமென்ற சம்பாஜி வலியுறுத்தி இருக்கிறார். மீசை வைக்காத கடவுள்களின் சிலை இல்லாத கோயில்களால் எத்தகைய பலனுமில்லை இன்று சம்பாஜி கருத்து கூறியிருக்கிறார். இதுபற்றி சம்பாஜி பிண்டே கூறுகையில், ஹனுமன், லக்ஷ்மணன் மற்றும் ராமருக்கு மீசை வைக்காதது ஒரு வரலாற்று பிழையாக உள்ளது. அதிலும் ராமர் மிகப்பெரிய எடுத்துக்காட்டான கடவுளாக இருப்பவர். அதனால் ராமருக்கு மீசையுடன் கூடிய சிலை அமைக்க வேண்டும் என்று அயோத்தி அறக்கட்டளையினருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறியுள்ளார்.
இவருடைய கருத்தை ஏற்க மறுக்கும் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை பண்டிதர் சத்தியேந்திர தாஸ் கூறுகையில், நாடு முழுவதிலும் இருக்கின்ற ராமர், சிவன் மற்றும் கிருஷ்ணன் சிலைகளுக்கு மீசைகள் கிடையாது. ஏனென்றால் அந்த சிலைகள் அவர்களது 16 வயதில் உருவங்களை குறிப்பிடுவதாக கருதப்படுகின்றன. சம்பாஜி வெளிப்படுத்துகின்ற கட்டுப்பாடற்ற கருத்து இத்தகைய சூழலுக்கு பொருந்தாது என்று பதில் கூறி இருக்கிறார்.