மிளகு பொடியை முகத்தில் தூவி சப்-இன்ஸ்பெக்டரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் பழனிவேல் என்பவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பழனிவேல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அவர் நந்தியாலம் பகுதியில் இருக்கும் தனியார் ஹோட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் அவரின் முகத்தில் மிளகுத்தூளை தூவி விட்டு ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர். இதனால் பழனிவேல் சுதாரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் இருந்த சைரனை ஒலிக்க செய்த போது மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் கண் எரிச்சலால் அவதிப்பட்ட பழனிவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.