சங்கிலி பறிப்பு வழக்கில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாவட்டத்தில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் ஜமால் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரத்தினாதேவி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ரத்தினாதேவி கோவிலுக்கு சென்ற போது மர்ம நபர் ஒருவர் அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து ரத்தினாதேவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மண்ணடி பகுதியை சேர்ந்த முகமது பாசில் என்பவர் ரத்தினாதேவியிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் முகமது பாசிலை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் பி.டெக் பட்டதாரியான முகமது பாசில் மீது காவல்நிலையத்தில் ஏற்கனவே செயின் பறிப்பு வழக்குள்ளது. இந்நிலையில் முகமது பாசில் தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு இளையோருக்கான ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு முகமது பாசில் மிஸ்டர் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.