தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் பரவி வருகிறது. அதனால் அனைத்து மாவட்டங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தற்போது பரவலாக அதிகரித்து வருவதால், அதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் அனைத்து மக்களும் தவறாமல் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபதாரம் விதிக்கப்படும். இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்லாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து திரையரங்குகள், ஹோட்டல்கள், உணவகங்கள், மற்றும் கடைகள் போன்ற அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அனைவரும் திருமணம், இறப்பு, கோவில் திருவிழாக்கள், விருந்துக்கள் மற்றும் சந்தைகள் போன்ற பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இதைத் தவிர வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் தங்களது நிறுவனத்திற்கு வருகை தரும் அனைத்து வாடிக்கையாளர்களும் பணியாளர்களும் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும். அவ்வாறு விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிப்பதற்காக வருவாய்த்துறை மற்றும் காவல் துறைகள் இணைந்து, மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் தலைமையில் 22 குழுக்கல் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கொரோனா பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.