சிறுத்தை மீண்டும் அட்டகாசம் செய்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள நம்பியூர் காந்திபுரம் பகுதியில் கன்னியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்காக பட்டிக்கு சென்று பார்த்த போது 3 ஆடுகள் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து கன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது சிறுத்தை ஆடுகளை கடித்து கொன்றது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று இரவு அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் வெங்கிடுசாமி என்பது தோட்டத்திற்குள் நள்ளிரவு நேரத்தில் புகுந்த சிறுத்தை 2 ஆடுகளை கடித்து கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் 3 அணிகளாக பிரிந்து சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இரவு நேரத்தில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.