நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்கும் நோக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி திடீரென வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதையடுத்து மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகின்ற ஜூன் 6முதல் 8ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது.
அதன் பிறகு ஜூன் 8-ஆம் தேதி இந்த கொள்கை கூட்ட முடிவுகள் வெளியிடப்படும். மே மாதத்தை தொடர்ந்து ஜூன் மாதமும் வட்டி விகிதம் உயர்த்தப்படும் என்பதே பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வந்தது. இருந்தாலும் இந்த மாதம் நடைபெற உள்ள கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை வட்டியை உயர்த்துவதற்கு முடிவு செய்தாலும் குறைந்த அளவே வட்டி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்றால்,நாட்டில் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை முக்கிய காரணமாக இருந்தது.
அதனால் பணவீக்கத்தை குறைப்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மாதம் குறைந்தது. அதுமட்டுமல்லாமல் சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு மற்றும் கோதுமை ஏற்றுமதிக்கு தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அதனால் பணவீக்கம் மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டியை உயர்த்த வாய்ப்புகள் ஓரளவு குறைவுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.