இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு தற்போது வரை விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதில் கடும் சிரமம் நிலவுகிறது. இதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் வீடு மற்றும் 35 எம்பிக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
200 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து மகிந்த ராஜபக்ச பதவியிலிருந்து விலகிய நிலையில் ரனில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பதவி ஏற்றார். இருந்தாலும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதையடுத்து மேலும் வன்முறை சம்பவங்கள் எதுவும் ஏற்படாமலிருக்க இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் புத்த பூர்ணிமாவை தொடர்ந்து இன்று நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
இருந்தாலும் மக்கள் விழாவில் பங்கேற்காமல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அங்கு போராட்டக்காரர்களை ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்கி வருகின்றனர்.இதனால் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப் படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.