17 வயது சிறுமி 12க்கும் மேற்பட்ட மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே போன்று 17 வயது சிறுமி ஒருவரை மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் இருக்கும் கல்லூரியில் சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வு நடைபெற்ற போது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் சிறுமியின் அழு குரலை கேட்டு அவரை மீட்டு உள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற அவர் சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். அப்போது சிறுமி கல்லூரி வளாகத்திற்கு வெளியே நின்றிருந்த தன்னை 12க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிக்குள் எழுத்து வந்ததாகவும் அங்கு வைத்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.
அதோடு தான் வைத்திருந்த 2,000 ரூபாயையும் அவர்கள் பறித்துக் கொண்டதாகவும் நடந்ததை யாரிடமாவது கூறினால் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். சிறுமி கூறியதை வைத்து புகார் எழுதிய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு 8 மாணவர்களை கைது செய்தனர். அதில் இருவர் மீது போக்ஸோ உட்பட ஆறு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மாணவர்களால் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கல்லூரி வளாகத்தின் அருகே மாணவி நின்றுகொண்டு இருந்ததற்கான காரணம் பற்றி இதுவரை தெரியவரவில்லை. இந்த வழக்கை விரைவாக விசாரிக்கவும் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் ஜான்சி மாவட்ட மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டாம் ஆண்டு மாணவர்கள் தொடர்பாக கல்லூரி ஒத்துழைப்பு தருவதாக நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.