மூணாறில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா பகுதியான மூணாறுவில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடுவது அவ்வப்போது நடைபெறும் ஒரு விஷயமாக இருந்து வந்தது. தற்போது கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகள் வராததால் கள்ள நோட்டு புழக்கம் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவது புத்துயிர் பெற்றுள்ளது. 200 ரூபாய் கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.
இந்த கள்ள நோட்டுகள் வழக்கமாக உள்ள ரூபாய் நோட்டுகளை விட சற்று தடிமனாக இருப்பதை தவிர இதில் வேறு எந்த வித்தியாசத்தையும் கண்டுபிடிக்க முடியாது. இதனால் கள்ள நோட்டுக்களை பெற்று ஏமாறும் மக்கள் இதனை வங்கிகளுக்கு கொண்டு சென்றால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். எனவே வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு இப்பகுதி வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.