கர்நாடக மாநிலத்தில் இருக்கும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியதால் நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி வருவாய்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று இரவு 7 மணி நிலவரப்படி காவிரியில் 42 ஆயிரம் கன அடியும், கொள்ளிடம் ஆற்றில் 95 ஆயிரம் கன அடி வெள்ளநீரும் திறந்து விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்ததோடு, 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் வேலை பார்க்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.