சர்வதேச விமான சேவை மீண்டும் தொடங்குவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் வெளிநாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. இதற்கிடையில் ஓமைக்ரான் பரவல் அதிகரித்ததால் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு திரும்பப் பெற்றது.
இதனை தொடர்ந்து இந்த மாதம் இறுதி வரை சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை நீடிக்கும் என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் 15ஆம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவையை மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளதாக தெரிகிறது. தற்போது கொரோனா கால கட்டம் என்பதால் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்குவது சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.