தமிழகத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக்காலத்தில் ஜனவரி 29ஆம் தேதி தை 1 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு நாளாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சித்திரையின் 1 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையில் 2022 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்களை தமிழக அரசு அதிகாரபூர்வமாக கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. அதில் சித்திரை 1ம் தேதியான ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால் திமுகவினர் கலைஞரின் வழியை பின்பற்றி தை 1 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பு திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறியது, ” திமுக ஆட்சியில் இருந்தபோது கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தை, அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் ரத்து செய்து சித்திரை 1ஆம் தேதி தமிழ் புத்தாண்டு நாளாக மாற்றியது. அதன்படி 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விடுமுறைக்கான அரசிதழில் சித்திரை 1 தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைமுறையிலுள்ள சட்டத்தை ரத்து செய்து மீண்டும் தை 1 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவிக்க புதிய சட்ட மசோதாவை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருவார்” என்று கூறினர். மேலும் தமிழக அரசு பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்க உள்ள தொகுப்பு பையில் ‘தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது. இதனால் திமுகவினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.