கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கேரளா நாட்டில் திரிச்சூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் 47 வயதுடைய நபர் ஒருவருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலினால் அவர் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். இது கொசுவால் பரப்பப்படும் வியாதியாகும். கேரளாவில் இது 2வது மரணமாகும். இதற்கு முன் 2019ம் ஆண்டில் இந்த நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வைரசால் பாதிக்கப்பட்ட கொசு ஒரு நபரை கடிக்கும்போது வியாதி பரவுகிறது. ஜிகா, டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் வைரசுகளை உள்ளடக்கிய குடும்பத்திலேயே இந்த வைரசானது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெஸ்ட் நைல் வைரசானது நரம்பு சார்ந்த வியாதியை உண்டு பண்ணி, மரணம் ஏற்படுத்தும். இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களில் 80% பேர் அறிகுறிகள் அற்றவர்களாக காணப்படுவர். இந்த தொற்று ஏற்பட்ட 20% பேருக்கு காய்ச்சல் காணப்படும். மேலும் தொற்று ஏற்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதே ஒருவருக்கு தெரியாத நிலையும் அதிகம் காணப்படும்.
இந்த நோய் குறித்த அறிகுறிகள் காய்ச்சல், தலைவலி, மயக்கம், உடல்வலி, குமட்டல், சொறி மற்றும் சுரப்பிகள் வீக்கம் ஆகியவை காணப்படும். இந்த நோயானது கடுமையாகும் போது மூளை காய்ச்சல், முடக்குவாதம் ஏற்பட்டு பின்பு மரணம் நிகழும். மேலும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மரணம் ஏற்படுத்த கூடியது. சிலருக்கு கழுத்து பகுதியில் இறுக்கம், தசை பலவீனம், பார்வை இழப்பு உள்ளிட்ட பல பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
கொசுவை கட்டுப்படுத்துதல் மற்றும் கொசு கடியில் இருந்து ஒருவரை பாதுகாப்பதே இதற்கான ஒரேயொரு தடுப்பு வழியாகும். முழு நீள ஆடைகளை அணிதல், நன்றாக மூடி கொள்ளுதல் ஆகியவை கொசுக்களில் இருந்து தடுப்பு அரணாக பாதுகாப்பு அளிக்கும். கொசு வளரும் பகுதிகளை குறைத்தல், நீர் சேமிப்பு கலன்களை மூடி வைத்தல், தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதும் அவசியம். கடுமையாக பாதிக்கப்பட்ட நபருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையானது, நபரை மருத்துவமனையில் சேர்த்தல், சுவாச உபகரணம் பயன்படுத்துதல் மற்றும் 2ம் நிலை தொற்றுகளை தடுத்தல் ஆகியவை அளிக்கப்பட வேண்டும். இதுவரை இந்த வியாதிக்கு எதிராக மனிதர்களுக்கு தடுப்பூசி எதுவும் கைவசம் இல்லை.