பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. கடந்த 2004-ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இத்திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்படும். அதன்பிறகு பிடிக்கப்பட்ட தொகையுடன் அரசு கூடுதல் தொகை செலுத்தி அரசு ஊழியர்களின் பணிக்காலம் முடிந்தவுடன் ஒரே தவணையாக பணத்தை வழங்கும். இந்த திட்டத்திற்கு ஆரம்ப காலத்திலிருந்தே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கல்வித்துறை தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது.
இதனால் கல்வித்துறை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஆசிரியர் சங்கத்தினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஆசிரியர் சங்க செயலாளர் பேட்ரிக் கூறியதாவது, உயர்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை தொகை வழங்க வேண்டும். அதன்பிறகு சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதேப்போன்று கடந்த 2010-ஆம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் அமர்ந்த ஆசிரியர்களுக்கும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கூறினார்.