நாடு முழுவதும் இயக்கப்படும் 1,700 ரயில்களும் அடுத்து வரும் சில நாட்களில் கொரோனா பாதிப்புக்கு முந்தைய கட்டண நடைமுறைகள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் ரயில்வே பயணிகளின் சேவையை முழுமையாக ரத்துசெய்து அதன்பிறகு ஊரடங்கு நேரத்தின்போது இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நீண்ட தூர சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் சாதாரண கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட பிறகு குறுகிய தூர ரயில்களும் இயக்கப்பட்டன. ஆனால் அனைத்து ரயில்களையும் சிறப்பு ரயில்கள் அடிப்படையிலேயே ரயில்வே துறை இயக்கியது. இதனால் ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இதனையடுத்து சிறப்பு ரயில் நடை முறையை கைவிட தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து மண்டல ரயில்வே அதிகாரிகளுக்கும் கடிதம் மூலம் ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கொரோனா கால கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் வரும் 15ஆம் நாள் முதல் அனைத்து பயணிகளும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் நேர கட்டுப்பாடின்றி ரயில் நிலையங்களுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.