முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என நம்பப்பட்டுவந்த நோய்கள் இப்போது மீண்டும் தலைதூக்கத் துவங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகளைத் தாக்கி நிரந்தரமாக உடற்குறைபாட்டையோ அல்லது மரணத்தையோ ஏற்படுத்தி விடும் போலியோ எனும் நோய்க்கிருமிகள் அண்மை காலமாக கண்டுபிடிக்கப்பட்டு வரும் விடயம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பிரித்தானியாவில் 40 வருடங்களுக்கு பிறகு போலியோ நோய்க் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி அமெரிக்க நகரமான நியூயார்க்கில் கழிவுநீரில் மேற்கொண்ட ஆய்வில் போலியோ வைரஸ்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கனடாவைப் பொறுத்தவரை 1994 ம் வருடத்துடன் போலியோ ஒழிக்கப்பட்டுவிட்டது. எனினும் மற்ற நாடுகளில் மீண்டும் போலியோ கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து, கனடாவிலும் போலியோ திரும்பவும் தலைதூக்கக்கூடும் என அந்நாட்டு சுகாதார ஏஜன்சி எச்சரித்துள்ளது. எனவே கனடா நகரங்கள் பலவற்றில் கழிவுநீரில் போலியோ வைரஸ்கள் காணப்படுகிறதா என்பதை அறிவதற்கான ஆய்வுகள் தொடங்க இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு சமுதாயத்தில் போலியோ நோய்க் கிருமிகள் இருக்குமானால், அவை கழிவுநீரில் வெளியாகி இருக்கும். எனவே கழிவுநீரை சோதனை செய்வதன் வாயிலாக அந்த சமுதாயத்தில் போலியோ கிருமிகள் இருக்கிறதா என்பதை அறிவியலாளர்களால் அறிந்துகொள்ள முடியும் என்பதாலேயே கழிவுநீரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.