ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் . தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது .
சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர் .மயங்க் அகர்வால் 52 ரன்களிலும் ,தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா ,ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து 199 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி பேட்டிங்கில் களமிறங்கியது. மும்பை அணியில் அதிரடியாக விளையாடிய டெவால்ட் ப்ரீவிஸ் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் 5 சிக்ஸர்களை விளாசி 49 ரன்னில் அவுட் ஆனார்.
தொடக்க வீரர்களில் இஷான் கிஷன் 3 ரன்னுடனும், கேப்டன் ரோகித் 28 ரன்னுடனும் (17 பந்துகள் 3 பவுண்டரி 2 சிக்ஸர்) ஆட்டமிழந்து வெளியேறினர். திலக் வர்மா 36 ரன்னும், பொலார்டு 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் தனி ஆளாக போராடி சிக்சர், பவுண்டரிகளை விளாசி 43 ரன்னில் வெளியேறினார். உனத்கட் 12 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் 3வது வெற்றி இதுவாகும். மும்பை அணி தொடர்ந்து 5 தோல்விகளை சந்தித்துள்ளது.