தமிழகத்தில் நிகழாண்டில் ஜனவரியில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்று வேகமாகப் பரவியதைத் தடுப்பதற்காக வார நாட்களில் இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. இதன் காரணமாக புறநகர் ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை ரயில்வே நிர்வாகம் விதித்தது. அந்த வகையில் 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் மட்டும் மின்சார ரயிலில் பயணிக்க அனுமதி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் சேவைகள் குறைப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இதனிடையில் கொரோனா தாக்கம் ஜனவரி இறுதியில் குறையத் தொடங்கியதால், ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறிது தளர்த்தப்பட்டன. இதேபோன்று புறநகர் ரயில்களில் பயணிக்க இருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன்படி புறநகர் மின்சார ரயில்களில் அனைத்து பயணிகளும் பிப்..1-ஆம் தேதி முதல் மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து ரயில் சேவையும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்புக்கு முன்பு இயக்கப்பட்டதைப் போன்றே, புறநகர் ரயில் சேவை இன்று(பிப்…14) முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று முதல் சனிக்கிழமை வரை வார நாட்களில் சென்னை-அரக்கோணம் மார்க்கத்தில் 254 சேவைகளும், சென்னை-கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 84 சேவைகளும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க்கத்தில் 80 சேவைகளும், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் 240 சேவைகளும் வழங்கப்படவுள்ளன. ஆகவே வார நாள்களில் மொத்தமாக 658 நடையில் மின்சாரம் ரயில்களானது இயக்கப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.